ஓட்டுச்சாவடிகளில் கேமரா, ரேம்ப் அடிப்படை வசதிகள் அமைப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, 237 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா, மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கான சாய்வு தள பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நேற்று உறுதி செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், 237 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், ஓட்டுச்சாவடி எண்-3 - ராஜாஜிபுரம், சத்தி வீதி, மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி எண்:138, அக்ரஹார வீதியில் உள்ள மகாஜன உயர்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி எண்:167, வளையக்கார வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடிகள் எண்: 164, 165, 168, 171, 172, 173 என, 6 ஓட்டுச்சாவடிகள் என, 9 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.இந்த ஓட்டுச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதுடன், வெப் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. தவிர, அங்கு மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுவர். அதேநேரம் மொத்தமுள்ள, 237 ஓட்டுச்சாவடிகளிலும் நேற்று கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்தது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் நுழையும் பகுதியில் அமைத்தனர்.
தவிர, ஓட்டுச்சாவடி அலுவலர், நுண் பார்வையாளர், அப்பகுதி வி.ஏ.ஓ., போன்றோர் கொண்ட குழுவினர் நேரில் சென்று, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மின் விளக்கு, மின் விசிறி, மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதியாக சாய்வு தளம், குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவற்றை உறுதி செய்தனர். இவை இல்லாத இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.
ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் வரிசை
யில் நிற்கும் இடங்களில் மர நிழல், கட்டட மேற்கூரை போன்றவை இல்லாத இடங்களில் சாமியானா அமைக்கும் பணியையும் துவங்கினர். மேலும், ஓட்டுச்சாவடியில் இருந்து தெரு அல்லது சாலையில், 100 மீட்டர், 200 மீட்டர் தொலைவை அறிந்து கொள்ளும் வகையில், வெள்ளை கோடு வரைந்து, எழுதினர். அவற்றை மண்டல அலுவலர்கள் நேரில் சென்று உறுதி செய்து கொண்டனர்.