ஆட்டோ ஓட்டுநர் சங்கம் புது கட்டணம் அமல்
சென்னை,சென்னையில், ஆட்டோ ஓட்டுநர்களால் நிர்ணயிக்கப்பட்டபுதிய கட்டணம், நேற்று முதல் அமலுக்கு வந்துஉள்ளது.
ஆட்டோக்களுக்கு, 12 ஆண்டுகளாக கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை.
பெட்ரோல், உதிரி பொருட்கள் விலை உயர்வால், ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, புதிய ஆட்டோ கட்டணத்தை, நேற்று முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் அமல்படுத்தினர்.
புதிய கட்டணத்தின்படி, முதல் 1.8 கி.மீ-.,க்கு 50 ரூபாய், கூடுதலான ஒவ்வொரு கி.மீ.,க்கும் 18 ரூபாய், காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு 1.50 ரூபாய், இரவு நேரத்தில் பகல் நேர கட்டணத்தில், 50 சதவீதம் அதிகம் என்ற விகிதப்படி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, புதிதாக நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோ கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறதா என, போக்குவரத்து போலீசார் அண்ணா சாலை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில், திடீர் சோதனை நடத்தினர். இருப்பினும், பயணியர் தரப்பில் இருந்து புகார்கள் வரவில்லை.
மேலும், 'ஓலா, ஊபர்' உள்ளிட்ட செயலிகள் வாயிலாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட சற்று குறைவாகவே இருந்ததால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.
இது குறித்து, அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாஹீர் ஹுசைன் கூறியதாவது:
ஆட்டோ குறைந்தபட்ச கட்டணம், 50 ரூபாய் என வசூலிப்பதால், பயணியர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆட்டோவுக்கான புதிய மீட்டர் கட்டணம் குறித்து, வரும் 5ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.