பாம்பன் கடலில் காவிரி குடிநீர் பல ஆயிரம் லிட்டர் வீணாகிறது
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் குழாய் உடைந்து காவிரி குடிநீர் கடலில் வீணாகிறது.
ராமேஸ்வரம் தீவில் வசிக்கும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் தாகத்தை காவிரி குடிநீர் தணிக்கிறது. இக்குடிநீர் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் நடைபாதையின் கீழ் குழாய் மூலம் ராமேஸ்வரம் தீவுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இங்கு பல இடங்களில் பலமுறை குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் ராமேஸ்வரம் நகராட்சி, தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சி தெருக் குழாய்களில் 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நடுவில் குழாய் உடைந்து காவிரி குடிநீர் கடலில் கலந்து பல ஆயிரம் லிட்டர் வீணாகி வருகிறது. வீணாகும் குடிநீரை பாதுகாத்து குழாயை சீரமைக்க மக்கள்பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனால் ராமேஸ்வரம்தீவு மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளதால் உடைந்த குழாயை சரி செய்யாமல் அலட்சியமாக உள்ள அதிகாரிகள் மீது கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.