இருபது ஆண்டுகளாக கவனிப்பாரற்ற ரோடு

மேலுார் : நாவினிப்பட்டியில் தார் ரோடு முழுவதும் பெயர்ந்து ஜல்லிக் கற்களாக மாறியதால் வாகன ஓட்டிகள் மனஉளைச்சலில் பயணிக்கின்றனர்.

நாவினிபட்டி ஊராட்சி மந்தை திடலில் இருந்து வடக்கு நாவினிபட்டி, மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலைக்கு செல்ல 20 ஆண்டுகளுக்கு முன் தார் ரோடு அமைக்கப்பட்டது.

இப்பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குடியிருப்பு வாசிகள், பள்ளி வாகனங்கள், விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்ல இந்த ரோட்டை பயன்படுத்தி வந்தனர். இந்தளவு முக்கியமான ரோடு முற்றிலும் சிதிலமடைந்து, ஜல்லிக் கற்களாக மாறியதால் இதில் பயணிப்போருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பீர்முகமது: தார் ரோடு ஜல்லிக் கற்களாக பரவிக் கிடப்பதால் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை வர மறுக்கின்றன. அதனால் 2 கி.மீ., தொலைவில் உள்ள மெயின் ரோடுக்கு சென்று பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது. தடதடவென இதில் பயணிக்கும் டூவீலர்கள் சேதமடைகின்றன. நடந்து செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். புதிய ரோடு அமைக்கும்படி கிராம சாலைகள் (நெடுஞ்சாலைத்துறை) அதிகாரியிடம் மனு கொடுத்தும் பயனில்லை. அதிகாரிகள் புதிய ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement