வரதட்சணை மரணங்கள்; உயர் நீதிமன்றம் வருத்தம்

பெங்களூரு : 'வரதட்சணை கொடுமையால் பெண்கள் மரணம் அடைவதற்கு, ஒரு முடிவே இல்லையா?' என, உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.


பெங்களூரு நாகசந்திராவைச் சேர்ந்தவர் விகாஷ். இவருக்கும் ஆந்திராவின் அகலி கிராமத்தின் ரோஜா என்பவருக்கும், 2019ல் திருமணம் நடந்தது. வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பதாக கடிதம் எழுதிவிட்டு, திருமணம் முடிந்த 13 மாதங்களில் ரோஜா துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


ரோஜாவின் தந்தை ராமகிருஷ்ண ரெட்டி அளித்த புகாரில், விகாஷ், அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவானது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.


இருதரப்பு தரப்பு வாதங்களையும் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி நாகபிரசன்னா அளித்துள்ள தீர்ப்பில், 'இன்றைய காலகட்டத்தில் சமூகம் வேகமாக முன்னேறுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். ஆனால் இன்னும் வரதட்சணையால் மரணங்கள் நிகழ்வது சமூகத்தை அதிர்ச்சி அடைய செய்கிறது. வரரதட்சணையால் பெண்கள் மரணம் அடைவதற்கு ஒரு முடிவே இல்லையா? இந்த வழக்கில் பிரதிவாதிகள் தொடர்பு பற்றி உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தண்டனையை உறுதி செய்ய முடியும்' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement