இளம் இந்தியா மீண்டும் சாம்பியன்: பெண்கள் 'டி-20' உலக கோப்பையில்

கோலாலம்பூர்: 'டி-20' உலக கோப்பையை (19 வயது) இந்திய பெண்கள் அணி மீண்டும் கைபற்றியது. பைனலில், 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றது.

மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. கோலாலம்பூரில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் கெய்லா ரெய்னக் (7) ஏமாற்றினார். மீகே வான் வோர்ஸ்ட் (23), ஜெம்மா (16), பே கோவ்லிங் (15) ஆறுதல் தந்தனர். அணி 20 ஓவரில் 82 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் திரிஷா 3, பருனிகா, ஆயுஷி, வைஷ்ணவி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கமலினி, திரிஷா ஜோடி துவக்கம் கொடுத்தது. கோவ்லிங் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த திரிஷா, சேஷ்னி வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார். தமிழகத்தின் கமலினி 8 ரன்னில் அவுட்டானார்.


ஆஷ்லீ வான் வைக் வீசிய 8 வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த சானிகா, மோனாலிசா லெகோடி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 84 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிஷா (44 ரன், 8 பவுண்டரி), சானிகா (26 ரன், 4 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகி (44* ரன், 3 விக்கெட்), தொடர் நாயகி (309 ரன், 7 விக்கெட்) விருதுகளை இந்தியாவின் திரிஷா வென்றார்.




இரண்டாவது முறை


பெண்களுக்கான (19 வயது) 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக (2023, 2025) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த 2023ல் நடந்த தென் ஆப்ரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த பைனலில், ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலக கோப்பை வென்றிருந்தது.



ரூ. 5 கோடி பரிசு
'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு, பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வாழ்த்து
தொடர்ந்து 2வது முறையாக 'டி-20' உலக கோப்பை (19 வயது) வென்ற இந்திய பெண்கள் அணிக்கு, பிரதமர் மோடி, இந்திய ஜாம்பவான் சச்சின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


பிரதமர் மோடி: நமது பெண்கள் சக்தி குறித்து மிகுந்த பெருமை கொள்கிறோம். 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது. அடுத்து வரவுள்ள விளையாட்டு நட்சத்திரங்களுக்கு ஊக்கம் அளிக்கும். அணியின் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துகள்.

சச்சின்: மீண்டும் 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துகள். இந்த அணி, அடுத்த தலைமுறை விளையாட்டு நட்சத்திரங்களுக்கு உத்வேகம் அளிக்கும். பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய தலைமை பயிற்சியாளர் காம்பிர், முன்னாள் இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சிறந்த தருணம்
இந்திய அணி கேப்டன் நிக்கி பிரசாத் கூறுகையில், ''உலக கோப்பை வென்றது என் வாழ்வின் சிறந்த தருணம். இந்த வெற்றியில் ஒவ்வொரு வீராங்கனைக்கும் முக்கிய பங்கு உள்ளது. எங்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்கிய பி.சி.சி.ஐ.,க்கு நன்றி,'' என்றார்.

வைஷ்ணவி '17'
அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் வைஷ்ணவி முதலிடம் பிடித்தார். இவர், 6 போட்டியில், 17 விக்கெட் சாய்த்தார். இரண்டாவது இடத்தை இந்தியாவின் ஆயுஷி (14 விக்கெட், 7 போட்டி) கைப்பற்றினார்.

திரிஷா '309'
அதிக ரன் குவித்த வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் திரிஷா முதலிடம். இவர், 7 போட்டியில், ஒரு சதம் உட்பட 309 ரன் எடுத்தார். அடுத்த இரு இடங்களை இங்கிலாந்தின் டேவினா பெர்ரின் (176 ரன்), இந்தியாவின் கமலினா (143 ரன்) கைப்பற்றினர்.

அடுத்து வங்கதேசத்தில்
பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயது) 3வது சீசன், வரும் 2027ல் வங்கதேசம், நேபாளத்தில் நடக்கவுள்ளன. முதன்முறையாக நேபாளத்தில் ஐ.சி.சி., தொடர் நடக்க உள்ளது. தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் வங்கதேசம், நேபாள அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

Advertisement