உயிரோட்டமான ஓவியங்களின் கண்காட்சி செம்மொழி பூங்காவில் பரவசம்

சென்னை:'இந்தியன் ஆர்ட் பேக்டரி' சார்பில், 'சென்னையில் ஓர் ஓவிய சங்கமம்' என்ற ஓவிய விற்பனை கண்காட்சி, தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில், நேற்று நடந்தது.

இது குறித்து, 'இந்தியன் ஆர்ட் பேக்டரி' தலைமை நிர்வாக அதிகாரி செல்வகண்ணன் கூறுகையில், ''கண்காட்சியில் 10 வயது முதல் 80 வயது வரை உள்ள, 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று, நவீன மற்றும் மரபு ஓவியங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில், கலை என்பது தத்ரூபமாக இருந்து வருகிறது. கலைக்கும், கலைஞர்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.

ஓவிய கலைஞர் சசிரேகா ராஜா கூறுகையில், ''காட்டு விலங்குகள் அதிகம் வரைந்து வருகிறேன். சிலவற்றிற்கு ரோமங்கள் அதிகமாக இருப்பதால், அதை தத்ரூபமாக வரைவதற்கு அதிக நேரம் செலவாகும். ஆயில் மற்றும் அக்ரிலிக் பயன்படுத்தி, துணி, கேன்வாஸ், மரம் ஆகியவற்றில் வரைந்து வருகிறேன். நாடு முழுதும் பல்வேறு ஓவிய கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளேன். கணவர் ராஜா, இதற்கு உறுதுணையாக இருக்கிறார்,'' என்றார்.

கண்ணாடி ஓவிய கலைஞர் புவனேஸ்வரி கூறுகையில், 'தலைகீழ் கண்ணாடி ஓவியம்' என்ற ஓவியத்தை வரைந்து வருகிறேன். இது, பண்டைய ஓவிய கலையான தஞ்சாவூர் ஓவியத்தை போன்றதாகும். கண்ணாடியின் பின்புறம் வரைந்து, அதை பிரேம் செய்ய வேண்டும். கவனத்துடன் நேர்த்தியாக வரைய வேண்டும். அக்ரிலிக், ஆயில் பெயின்ட் பயன்படுத்தி, வரைந்து வருகிறேன். இதில் வேலைப்பாடு அதிகம் இருப்பதால், ஆர்வம் உள்ள கலைஞர்கள் மட்டுமே வரைந்து வருகின்றனர்,'' என்றார்.

ஓவிய விற்பனை கண்காட்சியில், கண்ணை கவரும் பல ஓவியங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நுணுக்கமான கலை, தேங்காய் சிரட்டை சிற்பம், ஜல்லிக்கட்டு ஓவியம், பரிசு ஓவியங்கள் ஆகியவை, மக்கள் மனங்களை மலரச் செய்யும் விதமாக இருந்தன.

Advertisement