தொடரும் ஆமைகள் இறப்பு எண்ணுாரில் கரை ஒதுங்கின

எண்ணுார்:அரியவகை கடல் வாழ் உயிரினமான ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஆண்டுதோறும் நவ., - பிப்., மாத இடைவெளியில், இனப்பெருக்கத்திற்காக, தமிழக கடற்கரைகளை நோக்கி படையெடுக்கும்.

கரைகளில் முட்டையிட்டு பின், ஆழ்கடலுக்கு செல்லும். அதுபோன்ற நேரங்களில், படகு, இன்ஜின் மற்றும் வலைகளில் சிக்கி, உயிரிழக்கும் சில ஆமைகள் கரை ஒதுங்கும்.

இம்முறை, அதிகளவிலான ஆலிவ் ரிட்லி ஆமைகள், இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. அந்த வரிசையில், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரைகளில், 100க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து ஒதுங்கின.

இந்நிலையில், நேற்று காலை, எண்ணுார், தாழங்குப்பம், நெட்டுகுப்பம் உள்ளிட்ட கடற்கரைகளில், 30க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து, தடுப்பு கற்கள், துாண்டில் வளைவு கற்களில் ஒதுங்கி கிடக்கின்றன.

சில ஆமைகள் இறந்து ஒதுங்கி பல நாட்களாகியிருப்பதால், அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றன. இதனால், பலருக்கும் ஒவ்வாமை ஏற்படுகிறது.

தொடர்ந்து, அப்பகுதி மீனவ மக்கள் மற்றும் கடற்கரை வருபவர்களுக்கு கிருமி தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதார துறை அதிகாரிகள் கவனித்து, அழுகிய ஆமைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement