இளம்பெண்ணிடம் அத்துமீறல் அ.தி.மு.க., நிர்வாகி கைது
சென்னை:மயிலாப்பூர் நொச்சி நகரைச் சேர்ந்த 25 வயது பெண், சட்டப்படிப்பு படித்து வருகிறார். நான்கு நாட்களுக்கு முன், இவரின் 56 வயதான தந்தை, அதே பகுதியில் ராஜ்குமார் என்பவர் நிறுத்தியிருந்த சைக்கிளை, மாற்றி எடுத்துவந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், முதியவருக்கும், ராஜ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு, முதியவரின் மகளும், அ.தி.மு.க., பகுதி துணை செயலர் காசிநாதன், 50, என்பவரும் வந்துள்ளனர்.
அப்போது, தன் உறவினரான ராஜ்குமாருக்கு ஆதரவாக, காசிநாதன் பேசியுள்ளார். தன் தந்தை மீது திருட்டு பட்டம் சுமத்தியால், இளம்பெண்ணுக்கும் காசிநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, இளம்பெண்ணை ஆபாசமாக பேசி, ஆடைகளை கிழித்து, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், காசிநாதனை கைது செய்தனர்.