'டவுட்' தனபாலு
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே உறவு இருக்கிறது என, நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். பா.ஜ.,வின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கூட கண்டிக்க மறுத்து, தொடர்ந்து மென்மையான போக்கை அ.தி.மு.க., கையாண்டு வருகிறது. 2026 சட்டசபை தேர்தலில், இரு கட்சிகள் இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.
டவுட் தனபாலு: உங்க குற்றச்சாட்டை பார்த்துட்டு, 'பா.ஜ.,வுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும், உறவும் இல்லை'ன்னு அ.தி.மு.க., அறிவிக்கணும்... பா.ஜ., பக்கம் அ.தி.மு.க., போகாது என்பது உறுதியாகிட்டா, தி.மு.க., மீது அதிருப்தியில் இருக்கும் நீங்க, அந்த முகாமுக்கு மாறிடலாம்னு கணக்கு போட்டு காய் நகர்த்துறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: யமுனை நதியில் விஷம் கலந்ததாக பொய் பிரசாரம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி, ஹரியானா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து 8,500 கோடி ரூபாய் நிதி பெற்றும், நதியை சுத்தம் செய்யும் எந்த பணியையும் டில்லி அரசு செய்யவில்லை.
டவுட் தனபாலு: 'கெஜ்ரிவால் அரசு எதையும் செய்யலை'ன்னு 10 வருஷமா குற்றம் சாட்டிட்டே தானே இருந்தீங்க... அதனால, மத்திய அரசே பொறுப்பெடுத்து, யமுனை நதியை சுத்தம் செய்திருக்கலாமே... கெஜ்ரிவால் அரசிடம் 8,500 கோடி ரூபாயை துாக்கிக் கொடுத்துட்டு, இப்ப இப்படி புலம்பணுமா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தமிழக கவர்னர் ரவி, எல்லாவற்றுக்கும் அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறார். அனைத்து பிரச்னைகளிலும் அரசுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார். அது எங்களுக்கு நன்றாக உள்ளது; தொடர்ந்து, அவர் அதை செய்ய வேண்டும். அவர் அதை செய்ய செய்யத்தான் எங்களுக்கு மட்டுமல்ல; மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு, இந்த ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது. எனவே, அவர் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று, கவர்னரை கேட்டுக் கொள்கிறேன்.
டவுட் தனபாலு: ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் தர முடியலை... அதே நேரம், கவர்னரின் குற்றச்சாட்டுகளுக்கு, 'பா.ஜ.,வின் ஊதுகுழலா செயல்படுறார்'னு ஈசியா பதிலடி தர முடியுறதால, கவர்னரை இப்படி உசுப்பேத்தி விடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!