எப்படி அடக்குவது?

'எந்தெந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற விவஸ்தையே இல்லையா...' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில மக்கள்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவை இரண்டும் பக்கத்துப் பக்கத்து மாநிலங்கள்.

சமீபத்தில், ஒடிசா வனப்பகுதியில் இருந்து, ஜீனத் என்ற பெண் புலி, மேற்கு வங்க எல்லைக்குள் ஊடுருவி விட்டது. எல்லையோரப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியது.

தொடர் முயற்சிகளுக்குப் பின், ஒடிசா வனத்துறையினர் அந்த புலியை பிடித்து, மீண்டும் தங்கள் வனப்பகுதிக்குள் விட்டனர்; இந்த விவகாரம்தான், இப்போது அரசியலாகி உள்ளது.

'ஒடிசாவில் உள்ள வனத்துறையினர் என்ன வேலை பார்க்கின்றனர் என்றே தெரியவில்லை. அடிக்கடி, அவர்களது வனப்பகுதிக்குள் இருந்து, எங்கள் பகுதிக்குள் வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன...' எனக் காட்டமாக தெரிவித்தார், மேற்கு வங்க முதல்வர் மம்தா.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜியோ, 'இப்போதுதான் முதல் முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது; இதை மம்தா பெரிதுபடுத்துகிறார்...' என, பதிலடி கொடுத்தார்.

'விலங்குகளையாவது அடக்கி விடலாம்; இந்த அரசியல்வாதிகளை எப்படி அடக்குவது என்றுதான் தெரியவில்லை...' என்கின்றனர், ஒடிசா, மேற்கு வங்க மக்கள்.

Advertisement