சிவபுரிபட்டியில் ஓயாத முகூர்த்த நாள் நெரிசல்: காலியிடம் இருந்தும் பயனில்லை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கோயில் வளாகத்தில் வாகன நிறுத்தம் இல்லாததால் முகூர்த்த நாட்களில் மணமக்கள் நெரிசில் சிக்கி அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இவ்வொன்றியத்தில் சிவபுரிபட்டியில் உள்ள சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டிற்கு மேல் பழமையானது. இக்கோயிலில் சுற்று வட்டார மக்கள் முகூர்த்த நாளன்று திருமணம் விழாக்களை நடத்துகின்றனர். கோயில் அருகே கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான காலியிடங்கள் இருந்தும் வாகன நிறுத்தும் வசதி செய்து தரப்படாததால் முகூர்த்த நாட்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

முகூர்த்த நேரத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் கோயில் அருகே கூடுவதால் ஒட்டுமொத்தமாக சிவபுரிபட்டி ரோடே அடைபட்டு விடுகிறது.

இதனால் அவ்வழியாக அடுத்த கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் 10 கி.மீ., தூரம் சுற்றிச் செல்கின்றனர்.

ரோட்டில் வாகனங்கள் நிற்கும் போது வரும் மணமக்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் நெரிசில் சிக்கி தவிக்கின்றனர்.

கோயிலை ஒட்டி நிறைய காலியிடம் இருந்தும் அவற்றை வாகன நிறுத்தத்திற்கு தயார்படுத்த கோயில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே வரும் காலங்களில் நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் எடுக்க வேண்டும்.

Advertisement