'மக்களுக்கான பட்ஜெட்' உருவானது எப்படி? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
புதுடில்லி : மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு 12 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கும் முடிவை எடுத்தது எப்படி என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார்.
வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது; இது, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தாக்கல்
இந்த முடிவு எடுத்தது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியுள்ளதாவது: நாங்கள் பலமுறை பல்வேறு தரப்பினரை சந்தித்தபோதெல்லாம், ஒரு குறிப்பிட்ட விஷயத்தை முன்வைத்தனர். மிகவும் நேர்மையாக வரி செலுத்தும் நடுத்தர வருவாய் பிரிவினர், அதற்காக தங்களுக்கு கிடைப்பது என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
நேர்மையாக இருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து வந்தோம். இதற்கான ஒரு துவக்கம், கடந்தாண்டு ஜூலையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இருந்தது.
வருமான வரி முறையை மிகவும் எளிமையாக்கும், சுலபமாக்கும், சிக்கல் இல்லாத வகையில், நெருக்கடிகள் இல்லாத அளவுக்கு உருவாக்க முடிவு செய்தோம். இது தொடர்பான மசோதா விரைவில் தாக்கல் செய்ய உள்ளோம்.
இதற்கிடையே, நேர்மை யாக வரி செலுத்துவோரில் பெரும்பான்மையினராக உள்ள நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ஏதாவது சலுகை அளிக்க வேண்டும் என்று விரும்பினோம்.
ஒப்புதல்
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். உடனே அதை அவர் ஒப்புக்கொண்டார்; வரிச்சலுகை அளிக்கலாம் என்ற தன் ஆலோசனையை வழங்கினார்; அது, எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து தெரிவிக்கும்படி என்னை பணித்தார்.
அதன்படி, நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டு, பல ஆலோசனைகள் பெறப்பட்டு, 12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என்ற யோசனையை பிரதமரிடம் தெரிவித்தேன். உடனேயே அவர் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
ஜனநாயகம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன், மக்களால், மக்களுக்காக, மக்களுக்கான அரசு என்று கூறுவார். அதுபோல, இது மக்களால், மக்களுக்காக, மக்களுக்கான பட்ஜெட்.
நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மரியாதை செய்யும் வகையில், அவர்களுக்கான சுமையை குறைக்கும் வகையில், இந்த வரிச் சலுகை அளிக்கப்பட்டுஉள்ளது. இதற்கு முழு காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைகள் தான். இவ்வாறு அவர் கூறினார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து மேலும் கூறியதாவது: பிரதமர் மோடி, பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை, கோரிக்கைகளை கேட்கிறார்; அவற்றுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார். அந்த வகையில், இந்த அரசில் இடம்பெற்றுள்ளதை பெருமையாகக் கருதுகிறேன்.
வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்தாலும், நிதித்துறை அதிகாரிகள் மற்றும் வரி வாரிய அதிகாரிகளை அதற்கு ஒப்புக் கொள்ள வைப்பதில் கடும் சிரமத்தை சந்தித்தேன். போதிய ஏற்பாடுகளை செய்து, வரிவிலக்கு அளிக்கலாம் என்று அவர்கள் வாதிட்டனர். அவர்களை நான் குறை கூறவில்லை. அவர்களை பொறுத்தவரை, அரசுக்கு வருவாயை பெருக்குவதே அவர்களுடைய பணி. இருப்பினும், அரசின் நோக்கத்தை விளக்கி, அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.