பெண்ணிடம் வழிப்பறி புதுச்சேரி வாலிபர் கைது

கடலுார் : வடலுாரில், பெண்ணிடம் வழிப்பறி செய்த புதுச்சேரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வடலுார் அருகே கீழ்வடக்குத்து கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி தங்கச்சியம்மாள், 37; நேற்று முன்தினம் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மகனை பார்த்துவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்றபோது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், திடீரென தங்ச்சியம்மாள் வைத்திருந்த கைப்பையை பறித்தார். பையை கெட்டியாக பிடித்து கொண்டதால் தங்கச்சியம்மாளையும் சேர்த்து இழத்தபடி அந்த வாலிபர் தப்பிச்செல்ல முயன்றார்.

தங்கச்சியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மவுலி (எ) மவுலீஸ்வரன்,26; என்பதும், அவர் மீது சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம், மந்தாரக்குப்பம், கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

அதன்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மவுலீஸ்வரனை கைது செய்தனர்.

பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது பைக்குடன் கீழே விழுந்ததில் மவுலீஸ்வரன் கை எலும்பு முறிந்ததால் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement