போதை மாத்திரைகள் விற்ற வியாபாரி, 2 வாலிபர்கள் கைது

ஆண்டிபட்டி; தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சிறுவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த மதுரை கோரிப்பாளையம் ராஜேஷ்குமார் 25, ஆண்டிபட்டி சமத்துவபுரம் தினேஷ் குமார் 24, மற்றும் போதை மாத்திரைகளை 'சப்ளை' செய்த அப்பகுதி பிரதீஷ் 35, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஸ்டேஷன் அருகே சந்தேகப்படும்படி டூவீலரில் சென்ற இருவர், போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் விசாரித்தனர். இதில் மதுரை ராஜேஷ் குமார், ஆண்டிபட்டி தினேஷ் குமார் என தெரியவந்தது. இவர்களுக்கு ஆண்டிபட்டி சீனிவாசநகரைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரி பிரதீஷ் 'சப்ளை' செய்துள்ளதும் தெரியவந்தது.

அதனடிப்படையில் பிரதீஷ் அலுவலகத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 50க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், கஞ்சா, அலைபேசி மற்றும் ரூ.45 ஆயிரத்து 500ஐ கைப்பற்றினர். மூவரும் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement