ஜெர்மனி கிரிக்கெட்டில் சாதிக்கும் வீராங்கனை
- -நமது நிருபர் -
ஆண்கள் கிரிக்கெட்டிற்கு நிகராக, பெண்கள் கிரிக்கெட்டிற்கும் இன்று மவுசு அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம் வீரர்களை போல வீராங்கனைகளும் பேட்டிங்கில் அட்டகாசமாக சிக்சர்கள் விளாசுவதும், பீல்டிங்கில் புலி போல செயல்படுவதும் தான் காரணம்.
தற்போது பெண்கள் கிரிக்கெட் நடக்கும் மைதானத்திற்கும் கூட்டம் அதிகளவில் வருகிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியிலும் கர்நாடகாவை சேர்ந்த ராஜேஸ்வரி கெய்க்வாட், ஸ்ரேயங்கா பாட்டீல், வேதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வீராங்கனைகள் சாதித்து வருகின்றனர். இதுபோல பெங்களூரில் பிறந்து, ஜெர்மனி கிரிக்கெட்டில் இளம் வீராங்கனை ஒருவர் சாதித்து வருகிறார்.
பெங்களூரை சேர்ந்தவர் சரண்யா சதராங்கனி, 29. இவருக்கு சிறு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இருந்தது. தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்த போது, பள்ளியில் உள்ள ஆண்கள் அணியினருடன் இணைந்து விளையாடினார்.
பள்ளி அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் கர்நாடக பெண்கள் கிரிக்கெட் அணியில் 16, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது. வேதா கிருஷ்ணமூர்த்தி தலைமையின் கீழ் கர்நாடக அணிக்காக விளையாடினார்.
கல்லுாரி படிப்பை முடித்ததும், பட்டபடிப்புக்கு பிரிட்டனின் எஸ்செக்ஸ் பல்கலைக்கு சென்றார். அங்கும் மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். பின், மேல்படிப்புக்காக ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்தார்.
ஜெர்மனியின் அண்டை நாடான டென்மார்க்கில் உள்ள, கிளப் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு சிறப்பாக விளையாடியதால் கடந்த 2017 ல் டென்மார்க் முக்கிய அணியில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது.
பின், ஜெர்மனி அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. கடந்த 2020 ஆகஸ்ட் 12ம் தேதி ஆஸ்திரியாவுக்கு எதிராக போட்டியில் அறிமுகம் ஆனார்.
வலது கை பேட்ஸ்மேன், சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் சரண்யா, தேவைப்பட்டால் அணிக்கு விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார். இதுவரை 34 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 223 ரன்களும், 13 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.
தவிர, ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகவும் உள்ளார். ஜெர்மனியை சேர்ந்த பின் என்பவரை திருமணம் செய்து உள்ளார். தற்போது ஹாம்பர்க் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கிரிக்கெட், வாழ்க்கை இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வருகிறார்.
கிரிக்கெட்டில் அவர் இன்னும் நிறைய துாரம் பயணித்து பெருமை சேர்க்க வேண்டும் என்று, பெங்களூரில் உள்ள உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.