வெள்ளியங்கிரி மலையேற போகிறீர்களா? முதலில் கலெக்டர் முன்னெச்சரிக்கையை படியுங்கள்

கோவை : வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்காக செல்லும் பக்தர்கள், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்ல வேண்டும் என்று, கோவை மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாவட்ட கலெக்டர் அறிக்கை:



அறுபது வயதை கடந்தவர்கள், முதியவர்கள் குழந்தைகள், உயர் ரத்த அழுத்த நோய், இதயநோய் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் நோய், சிறுநீரக கோளாறுகள், சர்க்கரை நோய், வலிப்பு நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் இதர நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மலையேற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது.


மலையேற்றத்துக்கு செல்லும் பக்தர்கள், எக்காரணம் கொண்டும் தனியாக செல்லக்கூடாது. குழுவாக செல்வது மிகவும் நல்லது. அத்தியாவசியமான பொருட்கள், குடி தண்ணீர், உணவு மற்றும் மருந்து பொருட்களை, உடன் எடுத்து செல்ல வேண்டும்.


மலையேற்ற பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால், தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் விரிப்புகள் உடன் எடுத்து செல்ல வேண்டும்.


கோவில் வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவின் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே, மலையேற்றத்துக்கு செல்ல வேண்டும். பயணத்தின்போது உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, தேவையான அளவு குடிநீர் பருக வேண்டும்.


மலையேற்றத்தின் போது தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அசவுகரியங்கள் ஏற்பட்டால், பயணத்தை தொடர வேண்டாம். உடனடியாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவினை அணுக வேண்டும்.


இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.

Advertisement