லைட்டர் வெடித்து முதியவர் படுகாயம்

போத்தனூர் கோவை, போத்தனூரிலுள்ள வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன், 64 ; பேப்ரிகேஷன் வேலை செய்பவர். நேற்று முன்தினம் இவரது மனைவி, சிங்காநல்லூரிலுள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் இவரும், தாயாரும் இருந்தனர்.

இரவு சுமார், 8:55 மணியளவில் காஸ் சிலிண்டரை, 'ஆப்' செய்த ராஜேந்திரன், தனது அறைக்கு சென்று கதவைசாத்தினார்.

பீடி பற்றவைக்க லைட்டரை 'ஆன்' செய்தபோது, பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் தீ பற்றி, அவரது உடையிலும் பிடித்துள்ளது. அறையின் மேற்கூரையில் சிறு பகுதி பெயர்ந்து கீழே விழுந்தது. கதவும் உடைந்து வெளியே விழுந்துள்ளது.

படுகாயமடைந்த ராஜேந்திரன் அலறியபடி வெளியே வந்தார். அங்கிருந்தோர் தீயை அணைத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக மற்றொரு அறையிலிருந்த அவரது தாயார் காயமின்றி தப்பினார். போத்தனூர் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement