சிறந்த வீரர் டிராவிஸ் ஹெட்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட் வெனறார்.


கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) சார்பில், சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும். இதன்படி சிறந்த வீரருக்கான 'ஆலன் பார்டர்' பதக்கத்தை டிராவிஸ் ஹெட் தட்டிச் சென்றார். இதற்கான ஓட்டெடுப்பில் ஹேசல்வுட் (158 வாக்கு), கம்மின்சை (147) முந்தினார் ஹெட் (208). சி.ஏ., நிர்ணயித்த காலகட்டத்தில் மூன்று வித போட்டியிலும் சேர்த்து 1427 ரன் எடுத்திருந்தார் ஹெட். இவ்விருது வென்ற 15வது ஆஸ்திரேலிய வீரரானார் ஹெட்.
சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதையும் ஹெட் வென்றார். சிறந்த டெஸ்ட், 'டி-20' போட்டி வீரருக்கான விருதுகளை முறையே ஹேசல்வுட், ஆடம் ஜாம்பா தட்டிச் சென்றனர்.
சிறந்த வீராங்கனைக்கான 'பெலிண்டா கிளார்க்' பதக்கத்தை அன்னாபெல் சதர்லேண்ட் வென்றார். மொத்தம் 168 வாக்குகள் பெற்ற அன்னாபெல், ஆஷ்லே கார்ட்னர் (143), பெத் மூனேவை (115) பின்தள்ளினார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் (2024, பிப். 15-17) இரட்டை சதம் (210) விளாசிய அன்னாபெல், சமீபத்தில் மெல்போர்னில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் 163 ரன் குவித்தார்.
சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனை விருதை ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றினார். சிறந்த 'டி-20' போட்டி வீராங்கனை விருதை பெத் மூனே பெற்றார்.

Advertisement