திரிஷா, கமலினிக்கு இடம்: ஐ.சி.சி., கனவு அணியில்
கோலாலம்பூர்: ஐ.சி.சி., கனவு அணிக்கு (19 வயதுக்குட்பட்ட) இந்தியாவின் திரிஷா, கமலினி, ஆயுஷி, வைஷ்ணவி தேர்வாகினர்.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடந்தது. கோலாலம்பூரில் நடந்த பைனலில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது முறையாக (2023, 2025) உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஐ.சி.சி., சார்பில், இத்தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை தேர்வு செய்து கனவு 'லெவன்' அணியை வெளியிட்டது. இதில் இந்தியா சார்பில் திரிஷா, கமலினி, ஆயுஷி, வைஷ்ணவி என, நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.
இத்தொடரில் அதிக ரன் குவித்த திரிஷா (309), தொடர் நாயகி விருது வென்றார். தவிர 'சுழலில்' அசத்திய இவர், 7 விக்கெட் வீழ்த்தினார். 'டாப்-ஆர்டரில்' அசத்திய தமிழகத்தின் கமலினி, 143 ரன் எடுத்தார். இதில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 50 பந்தில், 56 ரன் எடுத்து இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார்.
இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த வைஷ்ணவி, மலேசியாவுக்கு எதிரான போட்டியில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில் 9 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய ஆயுஷி, மொத்தம் 14 விக்கெட் சாய்த்தார்.
இந்த அணியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து சார்பில் தலா 2, ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் சார்பில் தலா ஒரு வீராங்கனை இடம் பெற்றுள்ளனர். 12வது வீராங்கனையாக தென் ஆப்ரிக்காவின் நினி தேர்வானார். இந்த அணிக்கு கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் கைலா ரெய்னெக் அறிவிக்கப்பட்டார்.