நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
பொன்னேரி, பொன்னேரி நகராட்சியுடன், அருகில் உள்ள தடப்பெரும்பாக்கம் மற்றும் கொடூர் ஆகிய ஊராட்சிகளை இணைப்பதாக, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் தேதி, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.
இதற்கு, இரு ஊராட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து கிராமவாசிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கிராமசபை புறக்கணிப்பு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று, தடப்பெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள், பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவை பெற்ற சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், ஏழு கிராமங்களில், 100நாள் வேலை திட்டத்தில், 640 பேர் பணிபுரிகின்றனர்.
பொன்னேரி நகராட்சியுடன் இணைப்பதால், 100 நாள் வேலை திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கும்.
ஊராட்சி நிர்வாகம், எக்காரணம் கொண்டும், பொன்னேரி நகராட்சியுடன், இந்த ஊராட்சியை இணைக்க வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.