மேக் இன் இந்தியா திட்டம்: ராகுல் சொல்வது இதுதான்!

6

புதுடில்லி: ''மேக் இன் இந்தியா சிறந்த திட்டம் என்றாலும், அது தோல்வியடைந்துள்ளது என்பதை பிரதமர் ஒத்துக் கொள்ள வேண்டும்,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் அவர்களே, உங்களது பேச்சில், ' மேக் இன் இந்தியா' திட்டம் குறித்து பேசவில்லை. ' மேக் இன் இந்தியா' திட்டம் சிறந்த திட்டம் என்றாலும், அது தோல்வியடைந்தது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். ஜிடிபி.,யில் நாட்டின் உற்பத்தி 2012 ல் இருந்த 15.3 சதவீமாக இருந்தது தற்போது 12.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 60 ஆண்டுகளில் மிகவும் குறைவாகும்.

இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். ஆனால், சமீப நாட்களில் தே.ஜ., அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட எந்த அரசும், இந்த சவாலை எதிர்கொள்ள முடியவில்லை. நமது உற்பத்தி துறை பின்தங்கியதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்கவும், சர்வதேச அளவில் போட்டி போடும் வகையிலும் கொள்கை உருவாக்க வேண்டும்.

இந்தியாவில் உற்பத்திக்கான இந்த தொலைநோக்குப் பார்வையானது, மின்சார மோட்டார்கள். பேட்டரிகள் மற்றும் ஏஐ போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும். நமது உற்பத்தித்துறையை புத்துயிர் பெறவும், அதிநவீன உற்பத்தி திறனை வகுக்கவும், நமக்கு தேவையான பணிகளை உருவாக்கவும் இதுவே ஒரே வழி.


சீனா நம்மை விட 10 ஆண்டுகள் முன்னேறிய நிலையில் , வலுவான தொழில் அமைப்புடன் உள்ளது. இதனால், தான் அந்நாடு நம்மிடம் சவால் விடுகிறது. அவர்களுடன் திறமையாக போட்டியிடுவதற்கான நம்மிடம் உள்ள ஒரே வழி, நமது உற்பத்தி அமைப்புகளை உருவாக்கவும், அதற்கான தொலைநோக்கு பார்வையும் தேவை. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement