ஸ்ரீவள்ளி-ரியா ஜோடி அசத்தல்: மும்பை ஓபன் டென்னிசில்
மும்பை: மும்பை ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீவள்ளி, ரியா ஜோடி முன்னேறியது.
மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா பாட்யா ஜோடி, ஜப்பானின் ஹோண்டமா, ஒகமுரா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 5-7 என போராடி இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-2 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 10-7 என வென்றது. முடிவில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா ஜோடி 5-7, 6-2, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, நெதர்லாந்தின் ஹர்டோனோ ஜோடி 6-2, 6-3 என தாய்லாந்தின் பீங்டார்ன், ஜப்பானின் நஹோ சாடோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. கஜகஸ்தானின் ஜரினா, ரஷ்யாவின் யாஷினா ஜோடி விலகியதால், இந்தியாவின் ருடுஜா, பிரிட்டனின் அலிசியா ஜோடி நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.