சாம்பியன்ஸ் டிராபி: கம்மின்ஸ் சந்தேகம்

சிட்னி: சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

பாகிஸ்தான், துபாயில், வரும் பிப். 19 - மார்ச் 9ல் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்க உள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய உத்தேச அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் இவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அடுத்து இலங்கையில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய இவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் இவர், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

வரும் பிப். 11ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும், தங்களது அணியில் மாற்றம் செய்து கொள்ளவும், பிப். 12ம் தேதி 15 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை சமர்பிக்கவும், ஐ.சி.சி., கெடு விதித்துள்ளது. சமீபத்தில் இத்தொடரில் இருந்து ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' மிட்சல் மார்ஷ் விலகினார். காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விளையாடுவதும் சந்தேகமாக உள்ளது. இந்நிலையில் கம்மின்ஸ் பங்கேற்காவிட்டால், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமையலாம். ஒருவேளை கம்மின்ஸ் விலகினால், கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் நியமிக்கப்படலாம்.
ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் கூறுகையில், ''சாம்பியன்ஸ் டிராபியில் கம்மின்ஸ் பங்கேற்பது உறுதியில்லை. எனவே அணிக்கு புதிய கேப்டன் தேவைப்படுகிறார். இப்பதவிக்கு ஸ்மித் அல்லது ஹெட் தேர்வாகலாம். மருத்துவ குழுவின் அறிக்கைக்கு பின், கம்மின்ஸ் நிலை தெரியவரும்,'' என்றார்.




அம்பயர் அறிவிப்பு


சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர் குழுவை ஐ.சி.சி., அறிவித்தது. இதில் 3 'மேட்ச் ரெப்ரி', 12 அம்பயர் என, 15 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவின் நிதின் மேனன், சொந்த காரணங்களுக்காக விலகினார். 'மேட்ச் ரெப்ரி'யாக ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன், இலங்கையின் ரஞ்சன் மதுகாலே, ஜிம்பாப்வேயின் ஆன்டி பைகிராப்ட் தேர்வாகினர். அம்பயர்களாக குமார் தர்மசேனா (இலங்கை), ஜோயல் வில்சன் (டிரினிடாட்), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்பாரோ (இங்கிலாந்து) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement