சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு முதியவர் உட்பட 6 பேர் கைது

மானாமதுரை:மானாமதுரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளான 8 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 72 வயது முதியவர் உட்பட 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு மற்றும் ஆபாசமாக பேசுதல், நல்ல மற்றும் கெட்ட தொடுதல் குறித்து அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

பின்னர் அதுபோன்ற தொந்தரவுகள் மாணவிகளுக்கு யார் மூலமாவது ஏற்பட்டுள்ளதா என விசாரித்தனர். அப்போது 4,6,7,8ம் வகுப்பு படிக்கும் 8 மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், வரும் போதும் சிலர் இதே போன்ற பாலியல் தொந்தரவுகள் செய்வதாக கூறினர்.

குழந்தைகள் நலக்குழுவினர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் அக்கிராமத்திற்குச் சென்று மாணவிகளின் பெற்றோர்களிடம் புகாரை பெற்று ராமு 46, மணி 50, சசிவர்ணம் 38, லட்சுமணன் 46, முனியன் 66, மூக்கன் 72 ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பழனி என்பவரை தேடி வருகின்றனர்.

ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தாக்கியதில் ராமு என்பவர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement