மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் செங்கை சிறுவர்கள் அசத்தல்

சென்னை மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிறுவர் - சிறுமியர் அசத்தினர்.

செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த இரண்டு நாட்களாக, செங்கல்பட்டு, வித்யா சாகர் பள்ளியில் நடந்தது.

இதில், ஒன்பது, 13, 17, 25 ஆகிய வயது பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடந்தது. போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 400 சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

ஒன்பது வயது சிறுவரில், தக் ஷந்த் ஆனந்த், சிறுமியரில் மேஹாத்விகா செந்தில் ஆகியோர் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தனர்.

அதேபோல், 13 வயது பிரிவில், எம்.தர்ஷ், எஸ்.ஆர்.மிருணாளினி; 17 வயதில் கவிஷ்வரன், ஜி.தன்ஷிகா; 25 வயதில் ஹரிகணேஷ், நித்யா ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர். தவிர ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 சிறுவருக்கும், 15 சிறுமியருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

Advertisement