தெரு நாய்கள் தொல்லை... பழுப்பு நிறத்தில் குடிநீர்... பரிதவிப்பில் பழநி 17வது வார்டு மக்கள்
பழநி: தெருநாய் தொல்லை, பழுப்பு நிறத்தில் வரும் குடிநீர் என பழநி நகராட்சி 17வது வார்டில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர்.
அண்ணா நகர், திருவள்ளுவர் சாலை, ஆர்.ஏப்.ரோடு உள்ளடக்கிய இந்த வார்டில் மாவட்ட கல்வி அலுவலகங்கள், மருத்துவமனை, எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ள இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர், சுற்று கிராம மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பகுதியாக உள்ளது.
நகரின் முக்கிய பகுதியாக இருப்பதால் குடிநீர், குப்பை அகற்றுதல் நடக்கிறது.
கல்லறைத் தோட்டம் அருகில் உள்ள சந்து, பி.பி.என். வணிக வளாகம் அருகில் உள்ள சந்துகளில் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் இப்பகுதியில் நடமாட அச்சப்படுகின்றனர்.
சேதமான சாக்கடை
ஜனார்த்தனன், ஓய்வு அரசு ஊழியர், அண்ணா நகர்: குடிநீர் பிரச்னை அதிகம் உள்ளது. சாக்கடையும் சேதமடைந்துள்ளது. இதனால் கொசு தொல்லை அதிகம் உள்ளது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளுவர் ரோட்டில் அதிவேகமாக வாகனம் ஓட்டும் நபர்களை கட்டுப்படுத்த வேண்டும்.
தடுப்பூசி போடலாமே
சகுந்தலா, ஓய்வு ஆசிரியர், வள்ளுவர் தியேட்டர்: தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளது. நாளுக்கு நாள் தெரு நாய் அதிகரிக்கிறது. நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் தொற்று ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். வெளி நபர்கள் நடமாட்டம் இருப்பதால் போலீசார் கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும்.
நிறம் மாறுகிறது
பிரபாகரன்,டிரைவர், அண்ணா நகர்: தண்ணீர் பழுப்பு நிறத்தில் வருகிறது. இதனை குடிக்க அச்சம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் குடிநீரை சுத்தம் செய்து வழங்க வேண்டும். குடிநீரை காய்ச்சி, வடிகட்டினாலும் பழுப்பு நிறம் மாறுவதில்லை. குடிநீரில் குளோரிஷன் வாசனை அதிகம் வீசுகிறது. பாதாள சாக்கடை அமைத்தால் சுகாதாரக் கேடு அடைவது குறையும்.
சரி செய்யப்படும்
செபாஸ்டின்,கவுன்சிலர், (தி.மு.க.,): மக்கள் குறைகள் அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படுகிறது. குடி நீரினை சுத்திகரித்து சப்ளை செய்ய வேண்டும். ஆனால் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா என சந்தேகமாக உள்ளது. குப்பை முறையாக அகற்றப்படுகிறது. அண்ணா நகர், வள்ளுவர் தியேட்டர் பின்புறம், திருவள்ளுவர் குறுக்கு ரோடு பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகம் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது என்றார்.