நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட 3 போலீசார் கைது

சென்னை:போலீஸ்காரருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டு, அவரின் கால் எலும்பை முறித்த, மூன்று போலீசார் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படையில், மோட்டார் வாகன பிரிவில், போலீஸ்காரர்கள் ரங்கநாதன், 39; ஆனந்த், 33; சுந்தர்ராஜன், 38, மணிபாபு, 30, ஆகியோர் 10 ஆண்டுகளாக, பணிபுரிகின்றனர்.

இவர்களில் ரங்கநாதனுக்கு, டிசம்பரில் பணி மாறுதல் கிடைத்து, திருவல்லிக்கேணி சட்டம் ---- ஒழுங்கு காவல் நிலையத்தில், ரோந்து வாகன ஓட்டுநராக பணிபுரிகிறார்.

இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரை, ஜன., 3ம் தேதி மாலை, 6:00 மணியளவில் இடைமறித்து, சுந்தர்ராஜன், மணிபாபு, ஆனந்த் ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.

'உனக்கு பணி மாறுதல் கிடைக்க நான்தான் காரணம். எனக்கு பணம் தர வேண்டும்' என, சுந்தர்ராஜன் மிரட்டி உள்ளார். சம்பவ இடத்தில் நான்கு போலீசாரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.

போலீஸ்காரர் ரங்கநாதனை கீழே தள்ளி, மற்ற மூன்று போலீசாரும் கடுமையாக தாக்கி உள்ளனர்; காலை பிடித்தும் தரதரவென இழுத்துள்ளனர்.

கழன்று கிடந்த இரு சக்கர வாகன இருக்கைகளையும் ரங்கநாதன் மீது வீசியுள்ளனர். இதனால், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, எழும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுந்தர்ராஜன், ஆனந்த், மணிபாபு ஆகியோரை நேற்று கைது செய்தனர். ஏற்கனவே மூவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement