'டாஸ்மாக்' சங்கங்கள் பேச்சு தோல்வி வரும் 11ம் தேதி காத்திருப்பு போராட்டம்
சென்னை:“டாஸ்மாக் நிர்வாகம் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், வரும் 11ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடக்கும்,” என, தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத் தலைவர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவன மதுக் கடைகளில் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் பணியிடங்களில், 25,000க்கும் மேற்பட்டோர், தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர் சங்கம் உட்பட ஐந்து சங்கங்கள், சென்னை தலைமைச் செயலகம் முன், வரும் 11ம் தேதி முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.
அந்த சங்கங்களின் நிர்வாகிகளுடன், சென்னை எழும்பூர் டாஸ்மாக் அலுவலகத்தில், உயர் அதிகாரிகள் நேற்று பேச்சு நடத்தினர்; அதில் தீர்வு ஏற்படவில்லை. பேச்சுக்கு பின், டாஸ்மாக் பணியாளர் சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் பெரியசாமி கூறியதாவது:
பேச்சின் போது, சம்பள உயர்வு, ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவது உட்பட நான்கு கோரிக்கைகளை, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாகவும், அவை தொடர்பான அறிவிப்புகள் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் வெளிவர வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை, அரசின் கொள்கை முடிவு. இதை அரசிடம் தெரிவித்து, ஆலோசிக்க அவகாசம் வேண்டும் என, தெரிவித்து, போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.
பணி நிரந்தரம் தான் முக்கிய கோரிக்கை; போராட்டம் எங்களுக்கு முக்கியமல்ல. அரசின் கவனத்தை ஈர்க்கவே, போராட்டம் அறிவித்துள்ளோம்.
மதுக்கடை ஊழியர்கள், 22 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, பேச்சு நடத்த கூடுதல் அவகாசம் கோருவதை ஏற்க முடியாது. இதனால், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்.
அதற்கு முன் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.