மாநில ஜூடோ விளையாட்டு போட்டி பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி: மாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் பாராட்டினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தின ஜூடோ விளையாட்டு போட்டிகள், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறும், 14 மாணவர்கள், 8 மாணவியர் என, 22 பேர் பங்கேற்றனர். இதில், காவியா, உதயநிதி, பிரதீப், பிரேம் ஆகியோர், 4 தங்க பதக்கமும், யுவராஜ் வெள்ளிப் பதக்கமும், கலையரசு, நவநீதன் ஆகியோர், வெண்கல பதக்கமும் என மொத்தம், 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களை, மாநில தடகள சங்கத்தின் துணை தலைவர் மதியழகன் எம்.எல்.ஏ., நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறவும் வாழ்த்தினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், பயிற்சியாளர் வினோத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement