வி.ஏ.ஓ., உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
குன்னத்துார்:திருப்பூர் மாவட்டம், குன்னத்துார், காவுத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனையாளர். தன் நிலத்தில் தோட்டக்கலைத்துறை மானிய உதவியோடு பூச்செடிகள் பயிரிட முடிவு செய்தார். இதற்காக நிலத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்பட்டன.
கடந்த 2011ம் ஆண்டு அந்த ஆவணங்களை பெற ஆனந்தன், காவுத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது வி.ஏ.ஓ., குணசேகரன், 71, என்பவர், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்த புகாரில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார், 2011 நவ., 22ம் தேதி டிரைவர் சதீஷ், 41 என்பவர் வாயிலாக குணசேகரன் லஞ்சப் பணத்தை பெற்றபோது கையும் களவுமாக இருவரையும் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்லதுரை, குணசேகரனுக்கும், சதீசுக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.