'கலாசாரம், ஒற்றுமையை பாதுகாப்பதில் துறவியரின் பங்கு இன்றியமையாதது: அமித் ஷா

1

டோங்கர்கர்: “நம் நாட்டின் கலாசாரம், ஒற்றுமையை பாதுகாப்பதிலும், அறிவை பரப்புவதிலும், இந்தியாவில் வசித்த துறவியர் முக்கிய பங்காற்றியுள்ளனர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

சத்தீஸ்கரில், ஆச்சார்ய ஸ்ரீ வித்யாசாகர் ஜி மஹாமுனிராஜ் துறவியின் முதலாமாண்டு சமாதி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

ராஜ்நந்த்கோன் மாவட்டத்தில் உள்ள டோங்கர்கர் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

துறவியர் நாட்டின் ஒற்றுமைக்கு மிகவும் பாடுபட்டவர்கள்.

சுதந்திரத்துக்கு பின் நாடும், அரசும், மேற்கத்திய சிந்தனைகளால் பாதிக்கப்பட துவங்கிய போது, ஜெயின் துறவியான மறைந்த ஆச்சார்ய ஸ்ரீ வித்யாசாகர் மஹாராஜ் மட்டுமே நம் நாட்டையும், கலாசாரத்தையும், மதம் மற்றும் மொழிகளையும் தொடர்ந்து பாதுகாத்தார்.

அவரது செய்திகள், சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துகள், ஜெயின் சமூகத்துக்கு மட்டுமின்றி முழு நாட்டுக்கும் விலைமதிப்பற்ற பாரம்பரிய பொக்கிஷமாக விளங்குகிறது.

நம் நாட்டில் துறவியரின் பாரம்பரியம் மிகவும் வளமானது. தேவை ஏற்பட்ட போதெல்லாம், நாட்டின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க அவர்களின் வளர்ச்சி மிகவும் உதவியது.

அறிவை உருவாக்கி, நாட்டை அவர்கள் ஒற்றுமையாக வைத்திருந்தனர். அடிமைத்தன காலத்தில், துறவியர் பக்தி உணர்வின் வாயிலாக தேசிய உணர்வை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

ஆச்சார்யா ஸ்ரீ வித்யாசாகர் ஒரு துறவி மட்டுமல்ல. புதிய யோசனையையும், சகாப்தத்தையும் துவக்கிய ஒரு யுகபுருஷர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement