குப்பையில் கிடந்த மனுக்கள் எரித்த கலெக்டர் அலுவலர்கள்

திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமைகளில் ஏராளமானோர் மனு அளித்துச் செல்கின்றனர். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆனால், குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் குப்பை போல குவித்து வைக்கப்பட்டிருந்தன. பத்திர நகல்கள், முக்கிய ஆவணங்களின் நகல்கள், மனுவில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு சான்றுகள் என அனைத்தும், கலெக்டர் அலுவலக ஒப்புகை சீட்டுடன் குப்பையில் கிடந்தன. இதைப் பார்த்து பொதுமக்கள் அங்கு கூட துவங்கினர். தகவலறிந்த அலுவலர்கள் மனுக்களை தீயிட்டு எரித்தனர்.

இந்த மனுக்கள் தீர்வு காணப்பட்ட மனுக்களா, தீர்வு காணப்படாத மனுக்களா என்பது குறித்த தகவல் கூற அதிகாரிகள் மறுத்தனர். கலெக்டர் அலுவலகத்தில், ஏற்கெனவே அளிக்கப்படும் மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதில்லை என, வாரந்தோறும் பலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சிக்கும் நிலையில், மனுக்கள் குப்பையில் கிடந்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement