கருகும் மிளகாய் செடிகள்
ஆர்.எஸ்.மங்கலம் : கடந்த சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் வெப்பத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் மிளகாய் செடிகள் வாடுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அக்., கடைசி வாரத்தில் விதைப்பு செய்யப்பட்ட மிளகாய் செடிகள், தற்போது காய்கள் காய்த்து, மிளகாய் பழமாக மகசூல் கொடுக்கும் நிலையை எட்டி உள்ளன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மழையின்றி கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் மிளகாய் வயல்களில் உள்ள மிளகாய் செடிகள் வெயில் நேரத்தில் வாடுகின்றன. பெரும்பாலான வயல்களில் வறட்சியால் தரையானது வெடித்துள்ளன.
குறிப்பாக செங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், சேத்திடல், வண்டல், மறைக்கான் குடியிருப்பு, வரவணி, கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் மிளகாய் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.