தென்னம்பாக்கம் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

கடலுார்: தென்னம்பாக்கம் அழகு முத்து ஐயனார் கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

கடலுார் அடுத்த தென்னம்பாக்கத்தில் பிரசித்திப் பெற்ற அழகுமுத்து ஐயனார் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.

திருமண வரம் வேண்டியும், பள்ளி கல்லுாரிகளில் இடம் கிடைக்கவும், சொந்த வீடு கட்ட தடையுள்ளவர்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறினால் வேண்டுதலுக்கு ஏற்ப பொம்மைகள் வாங்கி வைத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இக்கோவிலில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது.

அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமை தாங்கி, அன்னதானம் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

விழாவில், உதவி ஆணையர் சந்திரன், கோவில் செயல் அலுவலர் மாலா மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். தினசரி 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement