ஐந்து மாதங்களில் தாய், சேய் இறப்பு இன்றி மகப்பேறு துறை சாதனை

தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான தொடர் பராமரிப்பு, பிரசவித்த தாய்மார்களுக்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மூலம் கடந்த ஐந்து மாதங்களில் சிசுக்கள் இறப்பு இன்றி, மகப்பேறு மருத்துவத்துறை சாதனை படைத்துள்ளது.',


என, மருத்துவக் கல்லுாரியின் ஒருங்கிணைந்த தாய் சேய் நல சிகிச்சைத் துறையின் தலைவர் (சீமாங் சென்டர்) டாக்டர் நந்தினி தெரிவித்துள்ளார்.இத்துறையில் இவர் தலைவராகவும், டாக்டர்கள் சாந்தவிபாலா, மகாலட்சுமி ஆகிய மூத்த மகப்பேறியியல் துறை பேராசரியர்கள் தலைமையில் 9 டாக்டர்கள், நர்ஸ்கள், பணிபுரிகின்றனர். தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக துறைத் தலைவர் நந்தினி பேசியதாவது:

ஆண்டிற்கு சாராசரியாக எத்தனை பேர் பிரசவத்திற்கு வருகின்றனர்



மாதத்திற்குசாராசரியாக 550 வீதம் ஓராண்டிற்கு 6600 கர்ப்பிணித் தாய்மார்கள் பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப் படுகின்றனர்.தொடர் கண்காணிப்பு, பராமரிப்பு, சிகிச்சை பெற்று,ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்.மரணம் இல்லாத பிரசவங்கள் நடந்துள்ளதா

கடந்த செப்டம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை ஐந்து மாதங்களில் 1324 ஆண் குழந்தைகளும், 1302 பெண் குழந்தைகள் என, 2626 குழந்தைகள் ஆரோக்கியதுடன் பிறந்துள்ளன. இதில் மரணம் இன்றி தாய் சேய் நலம் பாதுகாக்கப்பட்டு ஆராக்கியமாக உள்ளனர். இத் துறையின் தொடர் பராமரிப்பு, கண்காணிப்பு மூலம் இது சாத்தியமாகியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இரட்டை குழந்தைகள் பிரசவம் நடந்துள்ளதா



ஆம், செப். முதல் ஜனவரி வரை 15 ஆண் இரட்டை குழந்தைகளும், 22 பெண் இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்த தாய்மார்களுக்கு கூடுதல் சிரத்தை எடுத்து கண்காணிப்பு, பராமரித்தால் பிரச்னை் இன்றி இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

இறப்பு இன்றி பிரசவங்களை நடக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படுகிறது



கர்ப்பிணிக்கான சுகப்பிரசவத்திற்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. கர்ப்பிணியாக பதிவு செய்த அனைவருக்கும் முதல் மாதத்தில் இருந்தே, அனைத்து பரிசோதனையின் போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பரிசோதனை செய்து, அவை சீரமைப்பதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மிக முக்கியமாக நிறைமாத கர்ப்பிணிகள் ரத்தசோகை மற்றும் அதிக ரத்தப்போக்கு இருந்து பரிந்துரைக்கப்பட்டால் காலதாமதம் இன்றி, எப்போதுமே தயார் நிலையில் இருப்போம். இதற்காக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் பணியில் உள்ளனர். இதனால் தாய் சேய் நலம் காக்க முடிகிறது. எம் மாதிரியான பிரச்னையும், உடனுக்குடன் தீர்க்கப்பட்டு, சிகிச்சை அளித்து தாய், சேய் என இருவரையும் காப்பாற்றுகிறோம். இதனால் கடந்த 5 மாத சிறப்பு பணிக்காக கலெக்டர், மருத்துவமனை முதல்வர் ஆகியோர் அனைவரையும் பாராட்டி உள்ளனர்.

பச்சிளம் குழந்தைகளை புரை ஏறும் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறதே



பச்சிளங்குழந்தைகளை பராமரிக்கும் பிரசவித்த தாய்மார்கள் படுத்துக்கொண்டே பால் கொடுப்பது, கட்டிலில் சாய்ந்தபடி பால் கொடுப்பது முற்றிலும் தவறு. அமர்ந்த நிலையில்தான்பால் கொடுக்க வேண்டும். இதற்கு பிரசவித்த தாய்மார்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.படித்த பிரசவித்த பெண்கள் கூட இந்த தவறை தொடர்ந்து செய்வது வருத்தம்அளிக்கிறது.

ரத்த சோகை (அனீமியா) குறைபாட்டை தீர்க்க என்ன செய்ய வேண்டும்.



உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் ரத்த சிவப்ப அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் (ஹீமோகுளோபின்) ரத்தசோகை ஏற்படும். சத்தான உணவு வகைகளை எடுக்காத கருவுற்ற தாய்மார்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த ஆரோக்கிய குன்றிய கர்ப்பிணி தய்மார்களுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கிறோம். ஆலோசனை பெற்று, உணவு எடுக்க வலியுறுத்தி, அதனை கண்காணிக்கிறோம். இதனால் ரத்த சோகை பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு பிரசவம் எளிமையாகிறது. மருத்துவக்கல்லுாரி முதல்வர் வழிகாட்டுதல் இனிவரும் காலங்களிலும் தாய் சேய் நல சிகிச்சையை மேம்படுத்தி மரணமில்லா பிரசவங்களை முன்னெடுக்க புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம் என்றார்.

Advertisement