உடனடி கடன் செயலி மூலம் பல கோடி மோசடியில் ஈடுபட்ட கேரளா வாலிபர் கைது
புதுச்சேரி : உடனடி கடன் செயலி மூலம் பொது மக்களிடம் பல கோடி மோசடியில் ஈடுபட்ட கேரளா வாலிபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
உடனடி கடன் செயலி மூலமாக, பொது மக்களுக்கு கடன் கொடுத்து, கடன் மற்றும் வட்டித் தொகையை விட பல மடங்கு பணம் கட்டிய பிறகும், கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி ரூ. 465 கோடி மேல் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது.
இதுதொடர்பாக, புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தலைமை காவலர்கள் மணிமொழி, பாலாஜி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு, கேரளா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் 42; என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் உள்ள இணைய வழி மோசடி கும்பலுக்கும், இந்த மோசடி கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும், கொள்ளை அடித்த பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மிக எளிதாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதும், ஆன்லைன் கேமில் பணம் ஜெயிப்பவர்களுக்கு இந்த மோசடியில் வந்த பணத்தை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடி செய்து மக்களை மிரட்டி சம்பாதித்த பணம் ரூ. 465 கோடிக்கு மேல் இருப்பதால், மத்திய அமலாக்க துறையும், இது சம்பந்தமான தகவல்களை பெற்று, விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த மோசடி கும்பலிடம் இருந்து ரூ. 331 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் பெற்ற வாக்குமூலத்தின் படி இன்னும் பலருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., பாஸ்கரன் நேரடி கண்காணிப்பில் விசாரணையை மேற்கொள்ள, புதுச்சேரி காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்த மிகப்பெரிய டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதால், அது குறித்து விசாரனை நடத்திட புதுச்சேரி சைபர் போலீசார் கேரளா சென்றுள்ளனர்.
அவர்கள் அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள், அந்த நிறுவனத்தின் மூலமாக வெளிநாட்டுக்கு சென்ற நபர்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை விசாரித்து வருகின்றனர்.