மதுரையில் ஏ.பி.வி.பி., ஊர்வலம் அனுமதிக்க கேட்டு வழக்கு

மதுரை,: மதுரையில் ஏ.பி.வி.பி.,மாணவர் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் போலீஸ் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,) தென்தமிழக பொருளாளர் சிவகுமார் தாக்கல் செய்த மனு:

ஏ.பி.வி.பி.,தென் தமிழக மாநில மாநாடு மதுரையில் இன்று (பிப்.7) துவங்கி பிப்.9 வரை நடைபெறும். பிப்.8 மாலை 4:00 முதல் 5:00 மணிவரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியிலிருந்து பழங்காநத்தம் ரவுண்டானா வரை ஊர்வலம், பின் பொதுக்கூட்டம் நடைபெறும். போலீஸ் அனுமதி கோரி மனு அனுப்பினோம்.போலீஸ் உதவி கமிஷனர், 'சாலை விரிவாக்கம், நடுவில் தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. ஊர்வலத்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும். பிப்.9 ல் ரவுண்டானா அருகே ஒரு அமைப்பின் உண்ணாவிரதத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்.8 ல் முன்னேற்பாடு செய்ய உள்ளனர். ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது,' என உத்தரவிட்டார். இது சட்ட விரோதம். அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு: இது பொதுநல வழக்கு என்ற வரையறைக்குள் வராது. இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதியின் முன்னிலையில் பட்டியலிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

பின்னர் நீதிபதி பி.தனபால் முன்னிலையில் பட்டியலிடப்பட்டது.

அவர் போலீஸ் கமிஷனர், உதவி கமிஷனர் இன்று (பிப்.7) பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement