ஆதார் கார்டிற்காக அலையும் மூதாட்டி
திண்டுக்கல் : ஆதார் கார்டிற்காக கொடைக்கானலைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
கொடைக்கானல் வடகவுஞ்சியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி 74. ஆதார் அட்டை பெறுவதற்காக பல ஆண்டுகளாக கொடைக்கானல் இ-சேவை மையத்தில் பதிவு செய்தார். ஒவ்வொரு முறையும் அனைத்து தகவலுடன் பதிவு செய்தபோதிலும் ஒப்புகை சீட்டு மட்டுமே கிடைத்தது. ஆதார் அட்டை கிடைக்கவில்லை. ஆதார் அட்டை இல்லாததால் 100 நாள் வேலைத் திட்டத்திலும் பயனாளியாக சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோல் எந்த வித திட்டத்திலும் பயனடைய முடியவில்லை. இதை தொடர்ந்து ஆதார் அட்டை பெற திண்டுக்கல் கலெக்டர் அலுவலக ஆதார் மையத்தை அணுகினார்.
இங்கும் உரிய ஆவணங்கள் இல்லை என 2 முறை அலைக்கழிக்கப்பட்ட போதிலும் 3 வது முறையாக நேற்றும் வந்தார். காலையில் முன்னதாக வந்து காந்திருந்தபோதும் அதே பதிலையே அதிகாரிகள் கூறினர்.
வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாக கொண்டு மீண்டும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார்.
பாக்கியலட்சுமி கூறியதாவது: ஆதார் கார்டிற்காக தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன். ஏற்கனவே கொடைக்கானலுக்கு பலமுறை அலைந்தேன. ஆதார் வரவில்லை. தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறேன். இங்கு வருவதற்காக கன்னிவாடி உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன். அங்கிருந்து ஆட்டோவில் வந்து செல்ல தலா ஆயிரம் ரூபாய் வரை இரு முறை செலவிட்டும் ஆதார் அட்டை பெற பதிவு செய்ய முடியவில்லை. தற்போது 3 வது முறையாக பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றிருக்கிறேன் என்றார்.