மூளைச்சாவடைந்த போலீஸ் உடல் உறுப்புகள் தானம்
மதுரை, : மதுரை தல்லாகுளம் போலீஸ் குடியிருப்பில் வசித்தவர் மோகன்குமார் 31. ஆயுதப்படை போலீஸ்காரர். மனைவி யோகலட்சுமி, மகன், மகள் உள்ளனர். ஜன. 30ல் ஆயுதப்படை மைதானத்தில் மரக்கிளையை வெட்டும்போது தவறி விழுந்து சுயநினைவை இழந்தார்.
தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பிப். 4 இரவு 8:30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிப். 5 இரவு 11:30 மணிக்கு மூளைச்சாவு நிலையை அடைந்தார்.
மனைவி சம்மதத்துடன் நேற்று (பிப். 6) மோகன்குமாரின் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டன. இதயம் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், கல்லீரல், கருவிழிகள், எலும்பு மற்றும் தோல் அனைத்தும் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தாண்டில் முதல் உறுப்பு தானம் பெறப்பட்டது. அரசு மரியாதைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.