புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு துறையில் மெகா... குளறுபடி; வினாத்தாள் மாறியதால் மொழிப்பாட தேர்வு ரத்து
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_384898120250207055418.jpg?width=1000&height=625)
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட குளறுபடியால், உறுப்பு கல்லுாரிகளில் நேற்று நடைபெற இருந்த மொழிப்பாடத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
புதுச்சேரி பல்கலையின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில், மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட உறுப்பு கல்லுாரிகள் இயங்கி வருகிறது. இக்கல்லுாரிகளில் கடந்தாண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வந்தது.
புதுச்சேரியில் அரசு கல்லுாரிகளில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதம் வரை நடந்து முடிந்தது. இந்நிலையில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதமும், 2ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி மாதமும் செமஸ்டர் தேர்வு துவங்கியது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய முதலாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த ஜன. 31ம் தேதி துவங்கியது. பிரதான பாடத் தேர்வுகள் முடிந்து, நேற்று தமிழ், இந்தி மற்றும் பிரெஞ்சு மொழி பாடத் தேர்வு துவங்கியது. காலை 10:00 மணிக்கு வினாத்தாள் கொடுத்ததும், அதனை வாங்கி படித்த புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பயிலும் 7000க்கும் மேற்பட்ட மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம், முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு வினாத்தாளுக்கு பதில், இரண்டாம் ஆண்டு எழுத வேண்டிய 4வது செமஸ்டர் தேர்வு வினாத்தாள் வழங்கப்பட்டு இருந்தது.
கல்லுாரி நிர்வாகங்கள் இது குறித்து உடனடியாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு பிரிவுக்கு தகவல் தெரிவித்தன. உடன் பல்கலை தேர்வு பிரிவு, வேறு ஒரு வினாத்தாளை மெயிலில் அனுப்பி, அதனை நகல் எடுத்து வழங்கக் கூறியது. ஆனால், அந்த வினாத்தாளும் இரண்டாம் ஆண்டிற்கானது என்பது தெரிய வந்தது. இதனால் மொழிப்பாட தேர்வு நடத்த முடியாது நிலை ஏற்பட்டதால், தேதி குறிப்பிடாமல், தேர்வை ஒத்தி வைப்பதாகவும், மொழிப்பாட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என புதுச்சேரி பல்கலை நிர்வாகம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தேர்வறையில் இருந்து மாணவர்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
பல்கலையில் அலட்சியத்தினால், மொழிப்பாட தேர்வு ரத்தாகி, 7000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 31ம் தேதி நடைபெற இருந்த பி.எஸ்சி., புள்ளியியல், பி.எஸ்சி., கணிதத்துறை புள்ளியியல், கடந்த 1ம் தேதி நடக்க இருந்த இந்திய பொருளாதாரம், கம்யூனிக்கேஷன் ஆங்கிலம் ஆகிய பாட தேர்வுகள் பல்வேறு குளறுபடிகள் காரணமாக இன்று 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.