விமான சாகச ஒத்திகையில் பார்வையாளர்கள் பரவசம் 10 - 14 வரை கண்காட்சி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848992.jpg?width=1000&height=625)
இது சும்மா டிரெய்லர் தான் ' என்பது போல எலஹங்காவில் விமான சாகச நிகழ்ச்சி ஒத்திகை நேற்று பரபரப்புடன் நடந்தது. ஒத்திகையே இப்படி இருந்தால், ரெகுலர் விமான கண்காட்சி-யின் போது எப்படி இருக்கும் என பார்வையாளர்கள் திகைப்பில் உள்ளனர்.
பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமான பயிற்சி நிலையத்தில் வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை, மொத்தம் ஐந்து நாட்கள் விமான கண்காட்சி நடக்க உள்ளது.
ஆசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்காட்சியை பார்ப்பதற்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் மக்கள் வருகை தருவர்.
நடப்பாண்டு, 'தி பில்லியன்ஸ் ஆப் ஆப்பர்சுனிட்டீஸ்' எனும் கருப்பொருளில் கண்காட்சி நடக்க உள்ளது.
இந்திய மற்றும் சர்வதேச ஏரோஸ்பேஸ் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
விமானம், பாதுகாப்பு தொழில் நுட்பங்களில் தற்போது உள்ள புதிய கண்டுபிடிப்புகளை நேரடியாக பார்த்து ரசிக்கலாம். இதில் விமானவியல் அறிஞர், தொழிலதிபர்களுடான கலந்துரையாட வாய்ப்பும் கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஏரோ இந்தியா இணையதளத்திற்கு சென்று அனுமதி சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். தொழிலதிபர்களுக்கு 5,000 ரூபாய்; பொது மக்களுக்கு 2,500 ரூபாய், விமான நிறுவனத்தை சேர்ந்தோருக்கு 1,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அனுமதி சீட்டு
வெளிநாட்டினர் 50 டாலர் - இன்றைய மதிப்பு 4,381 ரூபாய் கொடுத்து அனுமதி சீட்டை பெற வேண்டும். அனுமதி சீட்டு கட்டாயம் அவசியம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்காக, நேற்று எலஹங்காவில் உள்ள விமான பயிற்சி மையத்தில் விமான சாகச ஒத்திகை நடந்தது. பத்திரிகையாளர்கள், பள்ளி மாணவ - மாணவியர், விமான படை அதிகாரி குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கலந்து கொள்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்பட்டன. ஒரு அனுமதி சீட்டில் நான்கு பேரை மட்டும் அழைத்து செல்லலாம். பலத்த சோதனைக்கு பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அனுமதி சீட்டு இல்லாமல் நிகழ்ச்சியை காண வந்த பொது மக்கள் திருப்பி அனுப்பபட்டனர்.
நிகழ்ச்சி காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும் என கூறப்பட்டது. ஆனால், முன்கூட்டியே விமான சாகசங்களை பார்க்க முடிந்தது.
பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர். திடலில் ஒரு சில இடங்களில் ராட்சத அளவிலான கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்கள் வெயிலில் இருந்து தப்பினர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்களான எச்.ஏ.எல்., ருத்ரா, எச்.ஏ.எல்., பிரசாந்த், எச்.ஏ.எல்., துருவ் மற்றும் சுகோய் சு 30, ரபேல், தேஜஸ், எம்.கே., 132, டார்னியர் போன்ற ஜெட்கள் வானில் வட்டமடித்தன.
இதை பார்த்த பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் திளைத்தனர். மூன்று ஹெலிகாப்டர்களில் இந்தியாவின் தேசிய கொடிகள் கட்டப்பட்டு வானில் சீறிப்பாய்ந்தன.
ரபேலின் ஆட்டம்
இதை பார்த்த பள்ளி மாணவர்கள் ஆனந்தத்தில் கும்மாளமிட்டனர். குறிப்பாக, ரபேல் விமானம் நொடிப்பொழுதில் வானின் உச்சிக்கு சென்றும், கீழே இறங்கியும் செய்து காட்டிய சாகசங்களை பார்த்த அனைவரும் மிரண்டனர். ரபேலில் இருந்து வெளிவந்த சத்தம் அனைவரது காதையும் துளைத்து எடுத்தது.
சூர்ய கிரண் ஏரோபாடிக் குழு நடத்திய சாகசத்தில் விமானங்கள் புகையை பறக்கவிட்டபடி சென்றன. இது பார்ப்பதற்கு அழகாய் இருந்தது.
மூவர்ண கொடி நிறத்தில் புகையை கக்கியபடி விமானங்கள் சென்றது, கண் கொள்ளா காட்சியாக இருந்தது. விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போல சென்றன.
சுகோய் சு 30 விமானம் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதன் பின் பக்கத்தில் இருந்து வெளிவந்த புகை பிரமாண்டமாக இருந்தது.
வெயில்
வானில் சாகசங்கள் செய்து காட்டிய விமானங்களை பார்ப்பதற்கு சிறுவர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பார்வையாளர்கள் தலையில் தொப்பியுடன், கையில் குடையுடன் காணப்பட்டனர்.
சிலர் வெயிலை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை பார்த்தனர். விமான பாதையில் பறவைகள் வரக்கூடாது என்பதால் அடிக்கடி வெடி வெடிக்கப்பட்டன. விமான சாகசத்தை பார்த்தவர்கள் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்தது மகிழ்ந்தனர்.
விமான சாகசம் நடக்கும் இடத்திற்கு அருகில் கெம்பேகவுடா விமான நிலையம் இருப்பதால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்திய விமான படையின் திறமையை பார்த்த அனைவரும், 'ராயல் சல்யூட்' அடித்தனர். மைதானத்தில் உணவகங்கள், கழிப்பறைகள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
விமானத்துறையில் பயன்படுத்தப்படும் ஆடைகள், விமானங்கள் படத்துடன் கூடியடி ஷர்ட்கள், பேன்ட்கள், பேட்ஜ்கள், பேனா, கைகடிகாரம் விற்பனை செய்யப்பட்டன
- நமது நிருபர் -.