அரசின் இலவச சேலைகள் உற்பத்தி திட்டம் கிடைப்பதில் தாமதம்; கூடுதலாக வழங்க கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தல்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகா, சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசின் இலவச சேலைகள் உற்பத்தி திட்டம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி திட்டத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இப்பகுதியில் உள்ள ஏழு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1000க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் கைத்தறிகளிலும், 200க்கும் மேற்பட்டவர்கள் பெடல் தறிகளிலும் ஜவுளி உற்பத்தியை தொடர்கின்றனர்.
கைத்தறி மற்றும் பெடல் தறிகளில் உற்பத்தியாகும் சேலைகள் தைப்பொங்கல் பண்டிகைக்கு அரசு மூலம் கொள்முதல் செய்யப்படும். தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான உற்பத்தி திட்டமும் வழங்கப்படும். தைப்பொங்கல் கொள்முதல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இந்த ஆண்டிற்கான புதிய உற்பத்தி திட்டம் இன்னும் கிடைக்கவில்லை. கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை இழப்பை தவிர்ப்பதற்காக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் நூல் வழங்கி உற்பத்தியை தொடர்கின்றனர். பெடல் தறிகளில் தற்காலிகமாக தற்போது சீருடை துணிகள் உற்பத்தி நடந்து வருகிறது.
அரசின் இலவச சேலைகளுக்கான உற்பத்தி திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நூல், தளவாடப்பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
உற்பத்தி திட்டம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் நூல் கொள்முதலும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் இல்லை.
கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 32 ஆயிரம் அரசின் இலவச சேலைகளுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு உற்பத்தி தொடர்ந்தது. உற்பத்தி திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்காவிட்டால் வேறு பகுதியில் இருந்து கொள்முதல் செய்து ஈடு செய்து விடுவர். இந்த ஆண்டு உற்பத்தி திட்டத்தில் எண்ணிக்கையை அதிகரிக்க நெசவாளர்கள் வலியுறுத்துகின்றனர். முன் கூட்டியே உற்பத்தி திட்டம் கிடைத்தால் கூடுதல் எண்ணிக்கையில் சேலைகள் உற்பத்தி செய்ய முடியும். தொடர் வேலை வாய்ப்பு கிடைக்கும். பெடல் தறிகளிலும் அரசின் இலவச சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என்றனர்.