சித்தராமையா, எடியூரப்பா வழக்குகளில் இன்று தீர்ப்பு

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா சம்பந்தப்பட்ட வழக்குகளில், இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா சிக்கி திணறுகிறார். இவ்வழக்கை அமலாக்கத்துறை, லோக் ஆயுக்தா என, இரண்டு விசாரணை அமைப்புகள் விசாரிக்கின்றன.

இதற்கிடையே முடா வழக்கை, சி.பி.ஐ., யிடம் ஒப்படைக்கும்படி கோரி, சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, தார்வாட் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். சித்தராமையா தரப்பில், மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்ம குமார், புகார்தாரர் சினேகமயி கிருஷ்ணா சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் மனீந்திர சிங் வாதிட்டனர்.

வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்து, விசாரணையை முடித்துள்ள நீதிமன்றம், பிப்ரவரி 7ம் தேதி தீர்ப்பு வெளியிடுவதாக அறிவித்திருந்தது.

இதன்படி இன்று காலை 10:30 மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. தீர்ப்பு எப்படி இருக்குமோ என, முதல்வர் சித்தராமையா கலக்கத்தில் உள்ளார்.

மற்றொரு பக்கம் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், இதே சூழ்நிலையை எதிர் கொண்டுள்ளார். உதவி கேட்டு எடியூரப்பா வீட்டுக்கு சென்ற போது, தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஒரு பெண் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக, பெங்களூரு நீதிமன்றத்தில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவாகி, விசாரணை நடந்துள்ளது. இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. கர்நாடகாவின் மூத்த அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை, நீதிமன்றங்கள் முடிவு செய்யவுள்ளன. இவர்களின் ஆதரவாளர்களும் கிலியில் உள்ளனர்.

Advertisement