வணிகத்துாதுவர்களாக விவசாயிகள் 90 டன் நெல், மக்காச்சோளம் விற்பனை

மதுரை: வேளாண் வணிகத்துறையின் கீழ் விவசாயிகளை வணிகத்துாதுவர்களாக மாற்றியதன் மூலம் இரண்டு மாதங்களில் மற்ற விவசாயிகளின் 70 டன் நெல், 20 டன் மக்காச்சோளத்தை நேரடியாக வயலில் இருந்து பெற்று வியாபாரிகளிடம் விற்கப்பட்டது.

மதுரை விற்பனைக்குழுவில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் மூலம் இது சாத்தியமானது என்கின்றனர் விற்பனைக்குழு செயலர் அம்சவேணி, துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி.

அவர்கள் கூறியதாவது:

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை இ - நாம் எனும் தேசிய மின்னணு சந்தை மூலம் வியாபாரிகளை வரவழைத்து விற்றுத் தருகிறோம். இதற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து 2024 ஏப்ரலில் விவசாயிகளின் வயலுக்கே சென்று விளைபொருட்களை பெறும் வகையில் பண்ணை வாயில் வர்த்தக முறை தொடங்கப்பட்டது. இதுவரை 45 விவசாயிகளின் 205 டன் விளைபொருட்கள் இம்முறையில் நேரடியாக வியாபாரிகளிடம் விற்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும் 2 விவசாயிகளை வணிகத்துாதுவர்களாக தேர்வு செய்துள்ளோம். எந்த ஊரில் யாருடைய வயலில் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளதென வணிகத்துாதுவர்கள் தெரிவிப்பர். நெல் என்றால் வியாபாரி, ரைஸ்மில் உரிமையாளரை வரவழைத்து சரியான விலை பெற்றுத் தருகிறோம். விற்பனைக் கூடத்தின் மண்டி ஆய்வாளர் நெல்லின் ஈரப்பதம், தரத்தை சொல்வதால் விலையை குறைத்து கேட்க முடியாது.

அறுவடை சீசன் என்பதால் 2 மாதங்களில் 70 டன் நெல், 20 டன் மக்காச்சோளம் வயலில் இருந்து நேரடியாக வியாபாரிகளுக்கு விற்றுள்ளோம். இதில்போக்குவரத்து செலவு குறைவதால்விவசாயிக்கு லாபம் கூடுதலாக கிடைக்கிறது. மக்காச்சோளம், செஞ்சோளம், குதிரைவாலி, தேங்காய், கொப்பரை, வாழை, எள், ராகி என எந்த விளைபொருளையும் விற்க உதவுகிறோம்.

விவசாயிகள் பயன்பெற கிராமங்களில் உள்ள வணிகத் துாதர்களையும், வேளாண் வணிகத்துறை உதவி அலுவலர்களை அணுகலாம் என்றனர்.

Advertisement