மகாலின் தர்பார் ஹால் தயார் லேசர் ஒலி, ஒளிக்காட்சி எப்போ

மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகாலின் தர்பார் ஹாலில் தரைத்தள பணிகள் முடிந்த நிலையில் பார்வையாளர்கள் ஒலி ஒளிக்காட்சியை எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.

திருமலை நாயக்கர் மன்னரின் வரலாற்றை தெரிவிக்கும் ஒலி ஒளிக்காட்சி ஆண்டு முழுவதும் மாலை 6:45 மணிக்கு ஆங்கிலத்தில், இரவு 8:00 மணிக்கு தமிழில் ஒலிபரப்பப்பட்டது. தர்பார் ஹாலில் இருந்து பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் மகாலில் முன்புற, பக்கவாட்டு சுவர்களில் வண்ண ஒளி பாய்ச்சப்பட்டு கதை சொல்லப்படும். இந்த கதை ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு ஒரு காட்சிக்கு 40 நிமிடங்கள் வரை ஒதுக்கப்பட்டது. பழைய திரைக்கதை காட்சிகளை நீக்கிவிட்டு நேரத்தையும் குறைத்து புதிய லேசர் வடிவ ஒலி ஒளிக்காட்சியாக திரையிட சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சி கழகம் சார்பில் ஓராண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் தர்பார் ஹாலின் தரைத்தள கற்கள் சேதமடைந்ததால் பாரம்பரியம் மாறாமல் புதுப்பிக்க ஓராண்டுக்கு முன் தொல்லியல் துறை ரூ.3.72 கோடி ஒதுக்கியது. தற்போது பணிகள் முடிந்த நிலையில் லேசர் ஒலி ஒளிக் காட்சி அமைப்பதற்கான பணியை இன்னும் தொடங்கவில்லை. ஓராண்டாக சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் நிலையில் விரைவில் அதற்கான பணியை சுற்றுலா வளர்ச்சி கழகம் தொடங்க வேண்டும்.

Advertisement