பெண்களே... நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்: கலக்கும் காயத்ரி

முதுகலை ஆங்கிலம், நிர்வாக மேலாண்மை படிப்பு முடித்திருந்தாலும் பாட்டி, தாயார் நாடகத்துறையில் இருந்ததாலோ என்னவோ படிப்பை முடித்த கையுடன் மாடலிங் துறையில் இறங்கியவர் இவர். ஆனால் முன்னணி தொழில் முனைவோராக இருந்த தந்தையின் விருப்பத்தை ஏற்று 'சூப்' தயாரிக்கும் தொழிலில் இறங்கி தலைநகரில் குறிப்பிடத்தக்க பெண் தொழில் முனைவோராக திகழ்கிறார் காயத்ரி. இதற்காக சிறந்த பெண் தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார் இவர். சென்னையில், தலைநகர் மக்களுக்கு தரமான வெஜ்டேரியன் சூப் வகைகளை தினமும் தயாரித்து வழங்குகிறார்.

தொழில் துறையில் சாதித்து வருவது குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக காயத்ரி மனம் திறந்ததாவது...

பாட்டி லீலாவதி பாய்ஸ் நாடக கம்பெனியில் முன்னணி நடிகையாக இருந்தவர். மறைந்த நடிகர்கள் எம்.ஆர்.ராதா போன்றோருடன் நடித்துள்ளார். அம்மா ஸ்ரீபாலாவும் பாட்டியை போல நாடக நடிகை. ரஜினி நடித்த குப்பத்துராஜாவில் அவரது அம்மாவாக பாட்டியும், சகோதரியாக என் அம்மாவும் நடித்துள்ளனர். அந்த காலகட்டத்தில் அப்பா சிட்டிபாபு வடமாவட்டங்களில் சினிமா விநியோகஸ்தர், தியேட்டர்களை நடத்தி வந்தார்.

அனைவரும் சென்னையில் இருந்ததால் அங்கு தான் பள்ளி, கல்லுாரி படித்தேன். ஆங்கிலஇலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற கையுடன் முதுகலை நிர்வாக படிப்பையும் முடித்தேன். 1998 ல் மாடலிங் துறை வளரத்துவங்கிய நேரம். படிப்பை முடித்த கையுடன் அம்மா சினிமா விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளராக இருந்ததால் மாடலிங் துறையில் வாய்ப்பு கிட்டியது. வர்த்தக நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். அத்துடன் 2003ல் பெஸ்டோகாம் நடத்திய போட்டியில் பங்கேற்று மிஸ் திருச்சி அழகி பட்டத்தையும் பெற்றேன். தொடர்ந்து மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தேன்.

இந்நிலையில் தியேட்டர் தொழில் எதிர்பார்த்த வருவாயை தராததால் அப்பாவுக்கு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் சிங்கப்பூர், ஹாங்காங் என பல நாடுகளுக்கு சென்ற போது மாலை நேரத்தில் அங்கு சூப் வகைகளுக்கு இருந்த வரவேற்பை கவனித்து சென்னையில் வெஜ்டேரியன் சூப் வகைகளை தயாரித்து வழங்க துவங்கினார். சென்னை மேற்கு மாம்பலத்தில் சிறிய அளவில் சூப் கடையை நடத்தினார்.

அதற்கு கிடைத்த வரவேற்பு என்னையும் இத்தொழில் இறங்க வைத்தது. வித்தியாசமாக, அதே வேளையில் நுகர்வோரை கவரும் வகையில் புதிய சூப் வகைகளை அறிமுகப்படுத்தினேன். ெஹர்பல், வாழைத்தண்டு, துாதுவளை, நெல்லி, துளசி என ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வகையான சூப்பை தயாரித்து மம்மிஸ் சூப்ஸ் என்ற பெயரில் கொடுக்க துவங்கினோம். தொழில் ரீதியாக வெளியிடங்களுக்கு செல்வோருக்கு வீடுகளில் சூப் தயாரிக்க நேரம் இருக்காது. இதனால் எங்கள் சூப் ஸ்டோருக்கு ஏராளமானோர் வரத்துவங்கினர். சென்னையில் பத்து இடங்களில் எங்கள் சூப் ஸ்டோர் செயல்படுகிறது.

காலை 10:30 மணிக்கு சூப் தயாரிக்க துவங்குவோம். அம்மா தான் தயாரிப்பை கவனித்து கொள்வார். மதியம் 2:30 முதல் இரவு 9:30 மணி வரை சூப் விற்போம். 50 பெண்களுக்கு அதுவும் கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, முதிய பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது மனதுக்கு திருப்தியை அளிக்கிறது. ஐ.டி., நிறுவனத்தில் குளோபல் ெஹட் ஆக இருக்கும் கணவரும் புதுப்புது விற்பனை நுணுக்கங்களை தந்து ஊக்கமளித்து வருகிறார்.

இளைய தலைமுறையினர் குறிப்பாக பெண்கள் படித்து முடித்து அரசு, தனியார் வேலைகளை எதிர்பார்க்காமல் தாமாகவே சிந்தித்து புதிய தொழில்களை துவங்கி சாதிக்க வேண்டும். இந்த உலகத்தில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றை கண்டறிந்து பெண்கள் செயல்பட்டால் சுயமாக யாரையும் எதிர்பார்க்காமல் பொருளாதார ரீதியாக சாதிக்க முடியும் என்றார்.

வாழ்த்த 95005 00302

Advertisement