ஆமதாபாத்தில் அசத்துவாரா கோலி... * இன்று 3வது ஒருநாள் போட்டி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852265.jpg?width=1000&height=625)
ஆமதாபாத்: மூன்றாவது ஒருநாள் போட்டியில், விராத் கோலி விஸ்வரூபம் எடுக்க வேண்டுமென இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி, தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி இன்று உலகின் பெரிய மோடி மைதானத்தில் (ஆமதாபாத்) நடக்க உள்ளது. இதில் இந்தியா அசத்தும் பட்சத்தில், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை முழுமையாக வெல்லலாம்.
11,000 ரன்
இந்திய அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. துவக்கத்தில் கேப்டன் ரோகித், சுப்மன் கில் அசத்துகின்றனர். கடந்த போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா, 'பார்மை' மீட்டார். 259 இன்னிங்சில் 10,987 ரன் எடுத்துள்ளார். இன்று 13 ரன் எடுத்தால், ஒருநாள் அரங்கில் 11,000 ரன்னை அதிவேகமாக எட்டிய உலகின் இரண்டாவது வீரராகலாம்.
14,000 ரன்
சமீப காலமாக கோலி தடுமாறுகிறார். இரண்டாவது போட்டியில் 5 ரன்னில் அவுட்டானார். இன்று எழுச்சி காண வேண்டும். 89 ரன் எடுத்தால், ஒருநாள் அரங்கில் 14,000 ரன் எடுத்த உலகின் மூன்றாவது வீரர் என்ற பெருமை பெறுவார். 2023ல் ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை பைனலில் கோலி, 63 பந்தில் 54 ரன் விளாசினார். இதே போல இன்றும் சிறப்பாக விளையாடினால், அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (பிப்.19-மார்ச் 9) நம்பிக்கையுடன் களமிறங்கலாம்.
அக்சர் அசத்தல்
மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா ஜொலிப்பது பலம். 5வது இடத்தில் வரும் அக்சர் படேல் எளிதாக ரன் (51, 41) சேர்க்கிறார். தனக்கு பொருத்தம் இல்லாத 6வது இடத்தில் ராகுல் தவிக்கிறார். 'வேகத்தில்' முகமது ஷமி, ஹர்ஷித் ராணா மிரட்டுகின்றனர். 'சுழல்' ஜாலத்திற்கு வருண் சக்ரவர்த்தி, ரவிந்திர ஜடேஜா உள்ளனர்.
மாற்றம் வருமா
முக்கியத்துவம் இல்லாத இப்போட்டியில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ராகுலுக்கு பதில் கீப்பர் ரிஷாப் பன்ட் இடம் பெறலாம். ஷமி, அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜாவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங், குல்தீப், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். ஜெய்ஸ்வால் இடம் பெறுவது கடினம்.
தேறாத பவுலிங்
இங்கிலாந்து அணி 'ஒயிட் வாஷ்' அபாயத்தில் இருந்து தப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த போட்டியில் 304 ரன் குவித்தும் பலன் கிடைக்கவில்லை. கேப்டன் ஜோஸ் பட்லர், சால்ட், ஜோ ரூட், டக்கெட், ஹாரி புரூக் நம்பிக்கை அளிக்கின்றனர். அட்கின்சன், மார்க் உட், அடில் ரஷித் உள்ளிட்ட பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவது பலவீனம்.
மழை வருமா...
ஆமதாபாத்தில் வெப்பமான வானிலை காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.
* ஆமதாபாத் புதிய மோடி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதல் முறையாக (ஒருநாள் போட்டி) மோத உள்ளன.
* ஆடுகளம் மந்தமாக இருக்கும். 'ஸ்பின்னர்'களுக்கு சாதகமானது.
கெய்ல் ஆதரவு
வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கெய்ல் கூறுகையில்,''வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தவிப்பது கிரிக்கெட்டில் சகஜம். 'பார்ம்' இல்லாத போதும், கோலி தான் உலகின் சிறந்த வீரர். இவரது புள்ளிவிபரங்களை பார்த்தால் புரியும். மூன்றுவித போட்டியிலும் சதங்கள் விளாசியுள்ளார். விரைவில் மீண்டு வருவார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நிச்சயம் சதம் அடிப்பார்,'' என்றார்.
மேலும்
-
மத்திய அரசின் நிதியை சுரண்டுகிறீர்கள் : மம்தா மீது நிர்மலா பாய்ச்சல்
-
டிஜிட்டல் கைது மோசடி ரூ.1.10 கோடி சுருட்டிய கும்பல்
-
மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'
-
செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
-
கனிமொழி துவக்கிய திட்டத்திற்கு வனத்துறையினர் தடை விதிப்பு
-
ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி வயிற்றில் இறந்த சிசு அகற்றம்