தமிழகம் முழுதும் தைப்பூசம் கோலாகலம்

தைப்பூச திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுதும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தேரோட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தன.

பழனி முருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு நடந்த திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு, உற்சவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி, முத்தங்கி அலங்காரத்தில், யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து, திருத்தேரில் எழுந்தருளினர். அமைச்சர் செந்தில்பாலாஜி தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

நாகரை மூலவராகக் கொண்ட, நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஒன்பதாம் நாள் விழாவில், காலையில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கண்ணனுாரில் 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பால சுப்பிரமணியர் கோவிலில், நேற்று தைப்பூச திருநாளை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி கோவில் தென்பழனி என, அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது.


ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்.


- நமது நிருபர் குழு -

Advertisement