வேப்பம்பட்டு ரயில்வே கடவுப்பாதையை ஆபத்தான முறையில் கடக்கும் வாகன ஓட்டிகள்

வேப்பம்பட்டு:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருநின்றவூர் - வேப்பம்பட்டு இடையே ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியே வேப்பம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் பெருமாள்பட்டு, புதுச்சத்திரம், திருமழிசை, பூந்தமல்லி வழியாக சென்னைக்கு சென்று வருகின்றனர்.

இந்த ரயில்கே கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால், இப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த கடவுப்பாதை மூடப்பட்டிருக்கும் போது, இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஆபத்தான முறையில் கடவுப்பாதையை கடந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலையும் நடந்து வருகிறது.

ஆண்களுக்கு நிகராக, பெண்களும் இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

மேலும், இப்பகுதியில், 2017ம் ஆணடு ரயில்வே பகுதியில் பாலம் அமைக்கப்பட்ட நிலையில், 2018ம் ஆண்டு, நெடுஞ்சாலைத் துறை பகுதியில் மேம்பால பணிகள் துவங்கப்பட்டு மந்தகதியில் நடந்து வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம், இப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகளின் நலன் கருதி, ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement